இணையதளம் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புகிறீர்களா? இதை அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்
இணையதளம் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புகிறீர்களா? இதை அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்
[ புதன்கிழமை, 21 ஒக்ரோபர் 2015, 09:30.05 மு.ப GMT ]
இணையதளம் மூலம் பணம் அனுப்பும்போது அதனை இடைமறித்து அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்றுள்ளதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கைப்பேசியிலிருந்து சில நிமிடங்களில் பணம் அனுப்புவது மிக எளிதான விடயமாக மாறியுள்ளது.
அதேபோல், உறவினர்களுக்கு அனுப்பப்படும் இந்த பணத்தை அவர்களுக்கே தெரியாமல் இடைமறித்து பறிக்கும் சமூக விரோத கும்பலும் அதிகரித்துள்ளது.
உதாரணத்திற்கு, ஜேர்மனி நாட்டில் உள்ள மக்கள் இந்த திருட்டு சம்பவங்களுக்கு அதிக அளவில் பலியாகி வருகின்றனர்.
ஜேர்மனியில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ”mTan” என்ற வங்கி சேவையை தங்களது கைப்பேசியில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவை மூலம், உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் உள்ள ஒரு நபருக்கு தேவையான பணத்தை உடனடியாக அனுப்ப முடியும்.
முதலில், கைப்பேசியில் உள்ள ”mTan” அப்பிளிகேஷனில் தேவையான தகவல்களை பதிவு செய்தவுடன், இறுதியாக வங்கியிலிருந்து ஒரு ரகசிய குறியீடு (Sceret Code) கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.
இதனை வாடிக்கையாளர் பதிவு செய்தவுடன், அடுத்த சில நிமிடங்களில் அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு பணம் போய் சேர்ந்துவிடும்.
இந்த நடைமுறையை தான் சில அதிநவீன திருட்டு கும்பல் தவறாக இடைமறித்து பயன்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஜேர்மனி மக்கள் Deutsche Telekom என்ற நிறுவனத்தை சேர்ந்த சிம்கார்டுகளை (Sim Card) அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சிம்கார்டில் உள்ள எண்களையே பணம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகின்றனர்.
சிம்கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளில் உள்ள தகவல்களை ‘சிம்கார்டுகளை விற்பனை செய்யும் கடை ஊழியர்கள்” சில அதிநவீன சாப்ட்வேர்களை பயன்படுத்தி திருடி விடுகின்றனர்.
இந்த தகவல்களை பயன்படுத்தி அந்த ஊழியர்கள் Deutsche Telekom நிறுவனத்தை தொடர்புக்கொண்டு, ‘இது தன்னுடைய சொந்த எண் (Mobile Number) என்றும், இதே எண் வரிசையில் தனக்கு மற்றொரு சிம்கார்டு வேண்டும்’ என கேட்டு அதே எண்ணில் ஒரு புதிய சிம்கார்டை பெற்று விடுகின்றனர்.
இந்த நிலையில், உண்மையான வாடிக்கையாளர் தனது சிம்கார்டு மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும், அது தொடர்பான அனைத்து தகவல்களும் போலியாக பெறப்பட்ட சிம்கார்டுகளுக்கு சென்று விடும்.
இந்த தகவலை பயன்படுத்தி தான் சில திருட்டு கும்பல் வாடிக்கையாளரின் பணத்தை இடைமறித்து திருடி வருவதாக Deutsche Telekom நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை சுமார் ஒரு மில்லியன் யூரோக்களை திருட்டு கும்பல் பறித்துள்ளதாக கூறிய அவர்கள், சிம்கார்டுகளை விற்பனை செய்யும் சில்லறை கடைகள் உரிமையாளர்களின் தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.