பழமையின் அடையாளம்: சுவிஸின் உலகப்புகழ் பெற்ற சாப்பல் பாலம்
29.03.2016 21:20
பழமையின் அடையாளம்: சுவிஸின் உலகப்புகழ் பெற்ற சாப்பல் பாலம் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2016, 12:05.15 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் உள்ள இரு நகரங்களை சேர்க்கும் முயற்சி தான் மிகப்பழமையான, உலகப்புகழ் பெற்ற சாப்பல் பாலம்.
சுவிட்சர்லாந்தின் மத்தியில் உள்ள லூசெர்ன் நகரில் தான் இந்த சாப்பல் பாலம் அமைந்துள்ளது.
சாப்பல் பாலத்தின் புகழால் தான் லூசெர்ன் நகரம் உலகளவில் பிரபலமானது என்று கூட சொல்லலாம்.
அங்கு ஓடும் முக்கிய நதியான ரெயூஸ், லூசெர்ன் நகரை பழைய மற்றும் புதிய நகரம் என இரண்டாகப் பிரிக்கிறது.
அந்த நதியை கடப்பதற்காக கடந்த 1332ம் ஆண்டில் கட்டப்பட்ட பாலமே இதுவாகும்.
பல நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் இந்த பாலத்தை, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்து போகிறார்கள்.
ஆனாலும், இது காங்கிரீட் பாலம் அல்ல, மரக்கட்டைகள் மற்றும் பலகைகளால் ஆனது தான்.
204 மீற்றர் நீளமுள்ள இந்த பாலமும் அதன் எண்முக டவரும், 500 ஆண்டுகள் பழமையான Musegg சுவர் மற்றும் அதன் மேடையை ஒத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரெயூஸ் நதி வெளியேறும் இடத்தில், ஊசி அணை ஒன்று 1860ம் ஆண்டில் கட்டப்பட்டது.
இது ஒரு நீர்வழிப்பதையாக கிடக்கிறது, ஒரு நினைவுச் சின்னமாக நிமிர்கிறது. இது பயணிகளை சுமப்பதோடு நிழல்கொடுக்கும் கூரையையும் கொண்டிருப்பது பாலங்களின் பரம்பரைக்கு மகுடம்.
1993ல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இது சேதமடைந்ததால், அதன் சிறப்பு மாறாமல் மறுபடியும் கட்டப்பட்டு 1994ம் ஆண்டு ஏப்ரல் 14ல் திறக்கப்பட்டது.
ஆனாலும், பாலத்தின் மேற்கூரையின் உள் மையப்பகுதிகளில் வரையப்பட்டிருந்த பழங்கால ஓவியங்களை தீ தின்றிருந்தது.
அந்த ஓவியங்களில் பழங்கால மக்களின் கலை, பண்பாடு, நாகரீகம் சொல்லப்பட்டிருந்தது.
அது கலாசார பாலமாக இக்கால தலைமுறைக்கு திகழ்ந்தது. அவைகள் புதுப்பிக்க முடியாமல் போனதால் அது வரலாற்று கருவூலத்தில் தீ செய்த கொள்ளையே.
இன்று நேற்றல்ல, 1840ம் ஆண்டிலிருந்தே சுவிட்சர்லாந்தின் மிகவலிமையான சுற்றுலாத் தலமாக லூசெர்ன் விளங்குகிறது.
முன்னோர்கள் மூலதனத்தில் வருங்கால தலைமுறைக்கும் சுற்றுலா வருமானம் தரும் இது ஒரு பொருளாதார பாலமும்தான்.