வேதாகமத்தின் காலம்

26/07/2014 02:35

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் உங்களை வாழ்த்துகிறேன்.
ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டதிலிருந்து புதிய வானம் புதிய பூமி (வெளி 21:1)வரை ஏழு காலங்கள் உள்ளன. ஓவ்வொரு காலங்களிலும் இரட்சிப்பின் செய்திகள் தேவன் ஏற்படுத்தினார். அந்த செய்தியை அங்கீகரிக்காமல் தோல்வியை தழுவும்பொழுது தண்டனைகளும் அங்கே நியமிக்கப்பட்டிருந்ததை வேதாகமத்திலிருந்து நாம் பார்க்க முடியும். இவைகளில் ஐந்து காலங்கள் நிறை வேறிவிட்டன. ஆறாவது காலத்தில் கடைசிப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஏழாவதும் கடைசியுமான ஆயிர வருட அரசாட்சி நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இவைகள் ஒவ்வொன்றையும் சுருக்கமாக கற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!.
களங்கமில்லா காலம்
பொருளடக்கம்:
தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைக்கும் பொழுது அவர்கள் களங்கமில்லா தவர்களாகவும், நன்மை தீமை அறியாதவர்களுமாக படைக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தில் அவர்களை வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் ஆதி 2:15.
இரட்சிப்பின் செய்தி: தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதி 2:16,17
தோல்வி: ஆதி மனிதனோ கட்டளையை மீறி கீழ்படியாமல் அந்த கனியை புசித்தான்
தண்டனை. அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.ஆதி 3:23,24)
மனசாட்சியின் காலம்
பொருளடக்கம்:  நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து வீழ்ச்சியடைந்த பின் மனிதன் நன்மை செய்வதும், தீமையை வெறுப்பதும் என்ற மனசாட்சி அவனுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. இதுவே மனசாட்சியின் காலம்.  “அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.(ஆதி 3:7) இந்த மனசாட்சியின் கால கட்டத்தில் எந்தவிதமான சட்டமும், பாடசாலைகளும் இல்லை.
இரட்சிப்பின் செய்தி: நல்லதை செய்ய வேண்டும். தீமை செய்யக் கூடாது. (பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான் ஆதி 3:22)
தோல்வி: மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, ஆதி 6:5
தண்டனை: நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. ஆதி 7:11,12,23
மனித அரசாங்கம்
பொருளடக்கம்: நடுங்கக்கூடிய பெரு வௌ;ளத்தினாலான தண்டனைக்குப் பின்பு 8 பேர் மீட்கப்பட்டனர். ஆண்டவர் பூமியை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்து ஆளும்படியாக நியமித்தார். ஆதி 9:1,2
இரட்சிப்பின் செய்தி : ஆண்டவரை விசுவாசி, பேழையை உண்டாக்கு. (ஆதி 6:16-18)
தோல்வி: பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அபூளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆதி 11:4
தண்டனை: பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். ஆதி 11:9.
வாக்குத்தத்ததின் காலம்
பொருளடக்கம்: தேவனை துக்கப்படுத்தி பாபேல் கோபுரத்தை கட்டின சந்ததியில், தேவன் ஒரு மனிதனாகிய ஆபிராமை அழைத்து அவனோடு உடன்படிக்கை பண்ணினார். அநேக வாக்குதத்தங்கள் அபிராமுக்கும், அவன் சந்ததிக்கும் கிருபையாகவும் கொடுத்தார். அதே நேரத்தில் விசுவாசம், கீழ்படிதல் என்ற எல்கையை வைத்தார். (ஆதி 12:1-3, 13:14-17, 15:5, 26:3, 28:12-13)
இரட்சிப்பின் செய்தி: கர்த்தருடைய வாக்குதத்தத்தை விசுவாசித்தல். (கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ ஆதி 12:1)
தோல்வி: வாக்குதத்தங்களை விசுவாசியாமல் அவிசுவாசியாக மாறினார்கள்.
தண்டனை: இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்கு அடிமையாக்கப்பட்டார்கள் (யாத் 1:13-14)
நியாயப்பிரமாண காலம்
பொருளடக்கம்: மறுபடியும் கர்த்தருடைய கிருபை, உதவியில்லாத மனிதனுக்கு உதவி செய்யும்படி கடந்து வந்து எகிப்திலிருந்து அவர்களை மீட்டது. கர்த்தர் சீனாய் மலையிலே நியாயப்பிரமாண உடன்படிக்கையை மோசே மூலமாக ஜனங்களுக்கு கொடுத்தார். அதை செய்வதாக ஜனங்கள் உறுதியளித்தனர்.(யாத் 19:8)
இரட்சிப்பின் செய்தி: கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொண்டு கீழ்படியுங்கள். (இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது  யாத் 19:5)
தோல்வி: வரலாற்றில் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் கர்த்தரை சோதித்து வீழ்ந்தார்கள். அநேக எச்சரிப்புகளுக்கு பின்பும் ஜனங்கள் பிரமாணத்தை கைக்கொள்ளவில்லை.
தண்டனை: இஸ்ரவேலிலிருந்தும், யூதாவிலிருந்தும் ஜனங்கள் துரத்தப்பட்டார்கள். கொஞ்ச ஜனங்கள் நெகேமியா, எஸ்றா தலைமையில் திரும்பினார்கள். 2இராஜா 17:1-18, 2இராஜா 25:1-11
கிருபையின் காலம்
பொருளடக்கம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலியான படியினால் கிருபையின் காலத்தை நமக்கு தொடங்கி வைத்தார். அதாவது நியாயப்பிரமாணத்தின் படி தேவன் எதிர்பார்த்த நீதியை, இயேசு கிறிஸ்துவே நமக்காக பலியாகி அந்த நீதியை தந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்றவர்களுக்கு இரட்சிப்பும், நித்திய ஜீவனும் அவர் மூலமாக யூதர்களுக்கும், புற ஜாதிகளுக்கும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல எபே 2:8,9 கிருபையின் காலத்திலுள்ளவர்கள் தேவனை விசுவாசித்து இரட்சிக்கப்படுகிறவர்கள் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.. இந்த சபையானது அவரடைய இரத்தம் சிந்தி சம்பாத்தியம் செய்யப்பட்டது அதாவது நமக்கு கிருபையாக இந்த சிலாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது.
இரட்சிப்பின் செய்தி இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று அறிக்கை செய்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்க வேண்டும். (என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.ரோம 10:9)
நியாயத்தீர்ப்பு: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை யாரெல்லாம் ஏற்றுக்கொண்டு சபைக்குள் வராமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டுள்ளது. (லூக் 17:26-30, லூக் 18:8, 2தெச 2:7-12, வெளி 3:15-16).
முதல் காரியமாக இந்த காலத்தின் கடைசியிலே பரலோகத்திலிருந்து தேவன் மேக மீதில் வருவார். அப்பொழுது, கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.1தெச 4:16-17.
இரண்டாவதாக சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிற்பாடு மனிதனுடைய சுயம் அழியும் படி தேவனால் நியமிக்கப்பட்ட அந்த 7 வருட குறுகிய கால உபத்திரவ காலம் நியமிக்கப்பட்டுள்ளது. (எரே30:5-7, தானி 12:1, செப் 1:15-18, மத் 24:21-22).
ஆயிர வருட அரசாட்சி
நியாயதீர்ப்புக்கு பிற்பாடு, இயேசு கிறிஸ்து பூமியில் இஸ்ரவேலை திரும்ப எடுத்து கட்டி ஆயிரம் வருடம் பூமியில் ராஜாதி ராஜாவாக ஆட்சி செய்வார். இதுவே ஆயிர வருட அரசாட்சி எனப்படும். அவருடைய வல்லமையின் சிங்காசனம் எருசலேமிலும், பரிசுத்தவான்களோடும், கிருபையின் காலத்தில் இரட்சிக்கப்பட்டவர்களோடும், கூடயிருக்கும் (ஏசா 2:1-4, ஏசா 11, சங் 15:14-17, வெளி 19:11-21, வெளி 20:1-6).
எனக்கு அருமையானவர்களே இந்த கிருபையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோம் அவர் நம்மளை சபையில் சேர்த்து நம்மளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வார்.

காத்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!